IPL 2023 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த சீசனில் முதல் முறையாக விக்கெட்டை இழக்காமல் பவர்ப்ளேவை முடித்தது. மேலும், முதல் ஐந்து ஓவர்களில் அணியின் ஸ்கோர் 41 ரன்களாகத் தான் இருந்தது. ஆனால், ஆறாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ஜோசன் ராய் 4 சிக்ஸர்களை அதிரடியாக விரட்டினார், இதனால் அணியின் ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்தது. 


கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோசன் ராய் மற்றும் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும் பந்து வீச்சாளர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் எளிதில் கிடக்கைவில்லை. இருவரில் ஜெகதீசன் நிதானமாக ஆட ஜோசன் ராய் அதிரடி காட்டினார். இவர் 22 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். ஆனால் அதற்கு பின்னர் மேற்கொண்டு பவுண்டரிகள் விளாச முடியாமல் திணறி வந்தார். 


போட்டியின் 10வது ஓவரினை பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் விஜய் வைஷாக் வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஜெகதீசன் வெளியேறினார். அதன் பின்னர் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஜேசன் ராய் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணியின் ஸ்கோர் 88 ரன்கள் சேர்த்து இருந்தது. 


அதன் பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா மற்றும் வெங்கடேஷ் கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். இருவரின் சிறப்பான ஆட்டத்தினால் கொல்கத்தா அணி 150 ரன்களைக் கடந்தது. இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க 18வது ஓவரை ஹசரங்காவிடம் பந்து கொடுக்கப்பட்டது. அவர் அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ராணா மற்றும் வெங்கடேஷ் என இருவரையும் வெளியேற்றினார்.  இறுதியில் ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் கூட்டணி சிறப்பாக ஆட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் விஜய் வைஷாக் மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.