ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்தார். இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லீக் போட்டியாக இது மாறியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறும் என்பதால் மைதானம் முழுவதும் கொல்கத்தா அணி ரசிகர்கள் நிரம்பி இருந்தனர்.


ஆட்டம் கண்ட கொல்கத்தா


கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை ஜோசன் ராய் மற்றும் குர்பாஸ் தொடங்கினர். மிகவும் முக்கியமான இந்த போட்டியில் இருவரும் நிலையான தொடக்கத்த்தினை தரவேண்டும் என பயிற்சியில் பேசியிருப்பார்கள். ஆனால் இவர்கள்களுக்கு எதிராக பந்து வீச வருபவர் போல்ட் என கொஞ்சம் யோசித்து இருந்தாலும், அவரது பயிற்சி குறித்தும் அவரக்ள் யோசித்திருக்க வாய்ப்பில்லை தான். இருவரது விக்கெட்டையும் போல்ட் அடுத்தடுத்து கைப்பற்ற கொல்கத்தா அணி சில ஓவர்கள் ஆட்டம் கண்டது. 


ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள்


ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் கூட்டணி அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றனர். இவர்களது கூட்டணியைப் பிரிக்க சஞ்சு சாம்சன் ஏதேதோ முயற்சி செய்ய அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கினர். குறிப்பாக அஸ்வினின் ஓவரில் வெங்கடேஷ் ஐயர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அசத்தினார். 10 ஓவர்கள் வரை சிறப்பாக ஆடிய இந்த கூட்டணியை 11 ஓவர் வீச வந்த சஹல் பிரித்தார். இவரது ஓவரில் ராணா தனது விக்கெட்டை இழக்க, அது சஹல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமைக்கு வழிவகுத்தது. 141 போட்டிகளில் 184 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 


தத்தளித்த கொல்கத்தா


அதன் பின்னர் வந்த ரஸல் 10 ரன்னில் வெளியேற, வெங்கடேஷ் ஐயருடன் ரிங்கு கைகோர்த்தார். இக்கட்டான சூழலில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் அதன் பின்னர் அதிரடி காட்டிய அவரது விக்கெட்டையும் சஹல் கைப்பற்றினார்.  மேலும் ஷர்துல் தகுரின் விக்கெட்டும் சஹலின் கணக்கில் வந்து சேர 17 ஓவரில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களுடன் இருந்தது.  


சஹல் 4 விக்கெட்டுகள்


அதன் பின்னர் கொல்கத்தாவின் நம்பிக்கையாக இருந்த ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் சஹல் 19வது ஓவரில் கைப்பற்றினார். இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் சஹல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதேபோல் போல்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 57 ரன்கள் சேர்த்து இருந்தார்.