ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


குஜராத் அணி பேட்டிங்:


கொல்கத்தா அணி நிர்ணயித்த 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சாஹா வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சுப்மன் கில் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். இதனால் குஜராத் அணிக்கு நல்ல் தொடக்கம் கிடைத்தது.


அடுத்தடுத்து விக்கெட்: 


மறுமுனையில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் பாண்ட்யா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 26 ரன்கள் எடுத்து இருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து 49 ரன்கள் எடுத்து இருந்த சுப்மன் கில்லும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால், 93 ரன்களை சேர்த்து இருந்தபோது குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.


மில்லர் - விஜய் கூட்டணி:


நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் விஜய் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இந்த கூட்டணி 41 பந்துகலில் 87 ரன்கலை சேர்த்தது . அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்களை குவிக்க, அவருக்கு உறுதுணையாக டேவிட் மில்லர் 32 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் குஜராத் அணி 17.5 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


 


முதல் இன்னிங்ஸ்:


ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், மழை குறுக்கிட்டதன் காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே இந்த போட்டி தொடங்கியது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் இன்றைய போட்டியில் குஜராத் அணி களமிறங்கியது.


அடுத்தடுத்து விக்கெட்:


இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டக்காரரான ஜெகதீஷன்  வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஷர்தூல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தினார். இதனால் 47 ரன்களை சேர்ப்பதற்குள் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


குர்பாஸ் அதிரடி:


மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ், குஜராத் பந்துவீச்சை பதம் பார்த்தார். சீரான இடைவெளியில் சிக்சர் மற்று பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் வெறும் 27 பந்துகளில் குர்பஸ் அரைசதம் கடந்தார். இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ராணா வெறும் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 


குர்பாஸ் அவுட்:


அதிரடியாக விளையாடி வந்த குர்பாஸ் 81 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரை தொடர்ந்து 19 ரன்கள் எடுத்து இருந்தபோது ரிங்கு சிங் பெவிலியன் திரும்பினார். கொல்கத்தா அணிக்காக 100வது போட்டியில் களமிறங்கிய ரஸல், இறுதிக்கட்டத்தில் சற்றே அதிரடி காட்டினார்.


குஜராத் அணிக்கான இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. ஆனால், இந்த இலக்கை குஜராத் அணி எளிதில் எட்டி வெற்றி பெற்றது.