Mohammed Shami in IPL: குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 17 விக்கெட்டுகள் கைப்பற்றி ஊதா நிற தொப்பியைக் கைப்பற்றியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி அணியை சிதைக்க குஜராத் அணியின் முகமது ஷமி காத்துக் கொண்டு இருந்தார்.
மிரட்டிய முகமது ஷமி:
போட்டியின் முதல் பந்தில் டெல்லி அணியின் பிலிப் சால்ட் தனது விக்கெட்டை விக்கெட் கீப்பர் சஹாவிடம் பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து ரேலி ரோசோவ் முகமது ஷமி வீசிய மூன்றவது ஓவரின் ஐந்தாவது பந்திலும், ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் மனீஷ் பாண்டேவும் கடைசி பந்தில் பிரியம் ஜார்ஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
அதன் பின்னர் போட்டியின் 7வது ஓவரை வீசிய முகமது ஷமிக்கு இந்த ஓவரில் விக்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இது இவருடைய ஐபிஎல் கெரியரில் சிறந்த பந்து வீச்சாக அமைந்ததுடன் நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.