ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது.


ஐபிஎல் சீசன்:


இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 


டெல்லி - குஜராத் மோதல்:


இந்த நிலையில் இன்று நடைபெறும் தொடரின்  44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சூழலில் இரு அணிகளும் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது.


பலம், பலவீனம் என்ன?


குஜராத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு அனைத்திலும் பலமாக உள்ளது. சுப்மன் கில், டேவிட் மில்லர், விஜய் சங்கர் மற்றும் அபினவ் மனோகர் அகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று, ஷமி, ரஷீத் கான் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிகளை மிரட்டி வருகின்றனர்.


அதேநேரம், டெல்லி அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. வார்னர் மட்டுமே தொடர்ந்து சிரப்பாக பேட்டிங்கில் அசத்தி வருகிரார். மிட்செல் மார்ஷ் ஐதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்தினாலும், அந்த போட்டி தோல்வியிலேயே முடிந்தது. பந்துவீச்சிலும் சொல்லிகொள்ளும் அளவிற்கு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அதே நேரம், நடப்பாண்டு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி இன்று களமிறங்குகிறது. 


இதுவரை நடந்தது என்ன? 


குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியிலும், நடப்பு சீசனில் டெல்லியில் நடந்த போட்டியிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. இதனால் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்று  குஜராத் அணியை பழிதீர்க்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.