ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றனர்.


முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சும்பன் கில் களமிறங்கினர். சற்று தடுமாற்றதுடன் பேட்டிங்கை தொடங்கிய சஹாவை 7 ரன்களில் அர்ஜூன் டெண்டுல்கர் வெளியேற்ற, ஒன் டவுன் பொசிசனில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். 


ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 34 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் கார்த்திகேயா வீசிய 12வது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 


அப்போது குஜராத் அணி 11.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ச்சியாக 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் சாவ்லா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் அதிரடியில் ஈடுபட தொடங்கினர். இவர்களது சிறப்பான பங்களிப்பால் குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை தொட்டது. 


தொடர்ந்து மில்லர் மற்றும் அபினவ் கீரின் வீசிய 18வது ஓவரில் 21 ரன்கள் குவிக்க, இந்த ஜோடி 35 பந்துகளில் 75 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தது. 


மெரெடித் வீசிய 18.1 பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட்டாக, அடுத்த பந்தே களமிறங்கிய தெவேடியா முதல் பந்தே சிக்ஸருக்கு பறக்க விட்டார். கடைசி ஓவர் வீச வந்த பெகண்ட்ராப் பந்தில் முதல் இரண்டு  பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் தெவேடியா. அடுத்த இரண்டு பந்துகள் ஒன்று மற்றும் டாட்டாக அமைந்தது. 5வது பந்தில் டேவிட் மில்லர், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.