16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி மே 28ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், நேற்று மழை பெய்ததால், போட்டி இன்று அதாவது மே 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 




இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி பந்து வீச முடிவு செய்தார். இதனால் பேட்டிங்கை வழக்கம்போல் சுப்மன் கில் மற்றும் விரத்திமான் சாஹா தொடங்கினர். முதல் இரண்டு ஓவரில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, அதன் பின்னர் அடித்து ஆடத் தொடங்கியது. குறிப்பாக ஓவருக்கு இரண்டு முதல் மூன்று பவுண்டரிகளை விரட்டுவதில் தீவிரமாக இருந்தனர். இரண்டு ரன்களில் இருந்த போது கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை தீபக் சஹார் தவறவிட, கில் அதனை பயன்படுத்தி அதிரடியாக ஆடினார். இதனல் குஜராத் அணி பவர்ப்ளேவில் 62 ரன்களை எட்டியது. 




பவர்ப்ளேவுக்குப் பின்னர் கில் ஜடேஜா பந்து வீச்சில், தோனியின் ஸ்டெம்பிங் முறையில் தனது விக்கெட்டை இழக்க, மைதனத்தில் கூடியிருந்த சென்னை அணி ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்தனர். அதன் பின்னர் வந்த சாய் சுதர்ஷன் சாஹாவுடன் இணைந்து குஜராத் அணிக்கு ரன்கள் சேர்த்தார். குறிப்பாக சாஹா அடித்து ஆட, சாய் சுதர்சன் நிதானமாக ஆடினார். இதனால் குஜராத் அணி ஓவர்களில் 100 ரன்களைத் தொட்டது. 


சாஹா - சாய் சுதர்சன்  அரைசதம்


தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தினால், குஜராத் அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்த சாஹா 36 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். சிறப்பாக ஆடி வந்த அவர் அரைசதம் கடந்ததும் தனது விக்கெட்டை இழந்தார். 39 பந்துகளில் அவர், 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம், 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்த சாய் சுதர்சன் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதனால் அவர் 33 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். 


அதன் பின்னரும் அதிரடியை குறைக்காத அவர், போட்டியின் 17வது ஓவரை வீசிய தேஷ் பாண்டேவின் ஓவரில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரி விளாசி அசத்தினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியாவும் சிக்ஸர்கள் விளாச குஜராத் அணி எளிதில் 200 ரன்களைக் கடந்தது. கடைசி ஓவரில் சாய் சுதர்சன் 96 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார், இதனால் சதம் விளாசும் வாய்ப்பினை தவறவிட்டார். 


இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் 96 ரன்களும், சாஹா  54 ரன்களும் எடுத்தனர்.