இந்த மாதத்தின் இறுதியில் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டி என்றாலே வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தனி உற்சாகம் குடிகொண்டுவிடும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன. அப்படியான ஐபிஎல் போட்டியில் முக்கியமான அணிகளில் முதல் இடத்தில் உள்ள அணின் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி எனலாம். பெங்களூரு, டெல்லி போன்ற அணிகளுக்கு எல்லாம் ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என லட்சியத்துடன் இருக்கும்போது, ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 


அப்படியான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் என்றால் அது மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த கீரன் பொல்லார்ட் எனலாம். பொல்லார்டைப் பொறுத்த வரையில் மும்பை அணியின் மூத்த பிள்ளைகளில் ஒருவர் எனக் கூறும் அளவிற்கு அணியினரால் கொண்டாடப்படக்கூடியவர். ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர்போன பொல்லார்ட் இந்த சீசன் முதல் மும்பை அணியின் பயிற்சியாளராக தன்னை மாற்றியுள்ளார். கடந்த ஆண்டே இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். 


இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கு மும்பை அணியை தயார்படுத்த இந்தியா வந்துள்ள பொல்லார்ட், மும்பை அணியுடன் இணைந்து வீரர்களை தயார் படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டும் சக வீரர்களுக்கு அறிவுரைகளை சக வீரராக வழங்கியிருந்தாலும் இம்முறை மிகவும் ஸ்டிரிக்ட் ஆன பயிற்சியாளராக இருக்கிறாராம். இதனாலே இவரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கோச்.. கோச்.. என ஒவ்வொரு முறை பேச்சை தொடங்கி முடிக்கையில் கூறுகிறார்களாம். அதுவும் அடிக்கடி கிண்டலாகவும் அழைப்பதால் இது குறித்து வீடியோ ஒன்றில் அவர், என்னை யாரும் கோச் என அழைக்க வேண்டாம். எப்போதும் போல, ”போலி” (Polly) என அழையுங்கள் என கூறியுள்ளார். 






ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பொல்லார்டை கிண்டலாக கோச், கோச் என தொடர்ந்து அழைத்து அவரிடம் வம்பு இழுத்துக்கொண்டு உள்ளனர்.  கீரன் பொல்லார்ட் மும்பை அணியில் ஆல்-ரவுண்டராக இருந்ததுடன் பலமுறை அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி மும்பை அணியை வெற்றி பெறச்செய்துள்ளார். 


இதுவரை 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட், அதில் 3 ஆயிரத்து 412 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக16 அரைசதங்கள் விளாசியுள்ளார். 218 பவுண்டரிகளும் 223 சிக்ஸர்களும் பறக்க விட்டதுடன் சிறப்பாக பந்து வீசி 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.