குஜராத் அணிக்கு லீக் போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி:


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்த குஜராத்தின் பந்துவீச்சை சமாளிக்க இரண்டு பேருமே திணறினர். இதையடுத்து, 5 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்களை சேர்த்து பிரித்வி ஷா விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் மார்ஷ் வெறும் 4 ரன்களை மட்டுமே சேர்த்து ஷமி பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.


வார்னர் பொறுப்பான ஆட்டம்:


அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் 37 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இதைய்டுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். அதன்படி 7 பவுண்டரிகள் உட்பட 37 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், அவர் எதிர்கொண்ட 32வது பந்தில் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் வார்னர் கிளீன் போல்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸ்ஸோ தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் அனார்.


டெல்லி நிதான ஆட்டம்:


5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய போரல்  2 சிக்சர்கள் உட்பட 20 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டானார். இதனிடையே, நீண்ட நேரமாக நிதானமாக விளையாடி வந்த ஷர்ப்ராஸ் கான் 30 ரன்களை எடுத்திருந்தபோது, ரஷீத் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுதார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல் 36 ரன்களை சேர்த்தார்.


இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும்,  அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்,


இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது. இதனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.