இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்கி ஒவ்வொரு அணியும் புள்ளிப் பட்டியலில் தங்களை எப்படி உயர்த்துவது என்ற முனைப்பில் விளையாடி வருகின்றன. ஆனால் இன்னும் வெற்றிக்கு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கும் அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தான். இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


இந்த இரு அணிகளில் டெல்லி அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை அணியும் தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரு அணிகளும் இன்னும் ஒரு அணியாக இணைந்து இந்த தொடரில் வெற்றியை பெறவில்லை. இந்த போட்டியில் எப்படியேனும் ஒரு அணி வெற்றிக் கணக்கை துவங்கும் என்பதால் இரு அணியின் ரசிகர்களும் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். 


இந்த போட்டியைப் பொறுத்தமட்டில், டெல்லி அணிக்கு சாதகமான முடிவுகள் வரலாம் எனலாம். காரணம் போட்டி நடக்கும் மைதானம் டெல்லி அணியின் சொந்த மைதானம் என்பதால் மும்பை அணிக்கு டெல்லி அணி கூடுமானவரை நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், மும்பை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவரும், தற்போதைய கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவின் கீழ் விளையாடியவருமான ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளதால், ரோகித் சர்மாவின் எண்ணவோட்டங்களை அறிந்து அதற்கேற்ப டெல்லி அணியை விளையாடச் சொல்லுவார் என கூறப்படுகிறது. 


மேலும், மைதானத்தினைப் பொறுத்தவரையில், பேட்டிங்கிற்கு சாதகாமக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இரு அணியும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால், ஓரளவுக்கு ரன் குவிப்பு இரு அணி சார்பிலும் இருக்கும் என கூறப்படுகிறது. 


ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இடையிலான கடைசி 5 போட்டிகளில், டெல்லி அணி மூன்று முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மும்பை மற்றும் டெல்லி அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள மும்பை  அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை இன்று டெல்லி அணியுடனான ஆட்டத்தின் போது தான் கண்டு பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.