IPL 2023 CSK vs MI: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு இன்று அதாவது மே மாதம் 30ஆம் தேதி அதிகாலை வரை மொத்தம் 16 ஐபிஎல் தொடர்கள் முடிவடைந்துள்ளது.  இந்த தொடர் இவ்வளவு உற்சாகமான ரசிகர்களைப் பெறும் என இந்த தொடர் தொடங்கப்பட்டபோது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இதில் கூடுதலாக, 2008ம் ஆண்டு முதல் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு இடையிலான போட்டி இந்த தொடரின் ”எல்-கிளாசியோ” போட்டியாக பார்க்கப்படும் எனவும் யோசித்திருக்க மாட்டார்கள். 


மும்பை - சென்னை:


இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி, போட்டிக்கு முன்னர், போட்டியின் போது, போட்டிக்குப் பின்னர் என ரசிகர்கள் இணையத்தில் மோதிக்கொள்வதாலேயே இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானம் நிரம்பி வழியும். இந்த இரு அணிகளில் முதலில் கோப்பையை வென்ற அணி சென்னை தான், அதுவும் 2010ஆம் ஆண்டு மும்பையை வீழ்த்தி தனது முதல் கோப்பையை வென்றது. அடுத்த ஆண்டும் கோப்பையை வென்ற் சென்னை அணி அடுத்ததடுத்து கோப்பையை கைப்பற்றியது. 2012ஆம் ஆண்டும் இறுதிப் போட்டிக்குச் சென்ற சென்னை அணி ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பினை இழந்தது. 




சென்னை அணியிடம் இரண்டு கோப்பைகள் இருந்தபோது மும்பை அணியிடம் ஒரு கோப்பை கூட இல்லை. 2013ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்த அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ள, மும்பை அணி சென்னையை வீழ்த்தி தனது முதல் கோப்பையை உச்சி முகர்ந்தது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டும் இந்த அணிகள் மோதிக் கொள்ள அப்போதும் மும்பை அணியே கோப்பையை வென்றது. இதனால் இரு அணிகளும் கோப்பையை வென்ற எண்ணிக்கை சமமானது. அதன் பின்னர், 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி சூதாட்ட விவகாரத்தினால் தடைசெய்யப்படவே, அதில் 2017ஆம் ஆண்டு மும்பை அணி தனது மூன்றாவது கோப்பையை வென்றது. இப்போது சென்னை அணியை விட மும்பை அணியிடம் ஒரு கோப்பை அதிகமாக இருந்தது. 




சமன் செய்த மும்பை:


அதன் பின்னர், 2018ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த சென்னை அணி அப்போதே கோப்பையை வென்று மும்பை அணியின் எண்ணிக்கையை சமன் செய்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை  மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று தனது கணக்கில் கோப்பையின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தியது. அதேபோல், 2020ஆம் ஆண்டு மும்பை அணி டைட்டிலை வெல்ல, மும்பை அணியின் வசம் ஐந்து கோப்பைகள் ஆனது. ஆனால் அப்போது சென்னை அணியிடம் மூன்று கோப்பைகள் தான் இருந்தது. அதன் பின்னர் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி கோப்பைகளை வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.