நடப்பு ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


சென்னை - கொல்கத்தா மோதல்:


ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஞாயிறு நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதற்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, முட்டி மோதி  போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். நடப்பு தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் கடைசி லீக் போட்டி என்பதால், இப்போட்டியை காண ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிக்கெட் கவுண்டர்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான, டிக்கெட் விற்பனையின் போது அங்கு லேசான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


டிக்கெட் விலை நிலவரம்:


கடந்த போட்டிக்கு செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை போன்று, இந்த முறையும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு  தனி கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ரூ.1500, 2 ஆயிரம், 2,500, 3 ஆயிரம், 5 ஆயிரம் என பல வகைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற விலையிலான டிக்கெட்டுகள் பெரும்பாலும், ஆன்லைனில் விற்பனையாகிவிடுகின்றன. அதேநேரம், ரூ.1,500 டிக்கெட்டிற்கு தான் கவுண்டர்களில் அதிகம் கூட்டம் குவிகிறது. பல மணி நேரம் காத்திருந்தும், கூட்ட நெரிசலிலும் சிக்கியும் இந்த டிக்கெட்டுகளை கிரிக்கெட் ரசிகர்கள் வாங்கி செல்கின்றனர்.


புள்ளிப்பட்டியலில் சென்னை:


மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இதுவரை, 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு போட்டி டை என 13 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக அந்த அணி நாளை மறுநாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு விளையாடுகிறது. 


முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிதீர்த்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கொல்கத்தா அணி போராடும். அதேநேரம், கொல்கத்தா அணியை வீழ்த்தி, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த சென்னை அணி முனைப்பு காட்டும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.