ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட கைல் ஜெமிசன் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியான பிறகு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 


நான்கு மாதங்கள் ஓய்வு:


நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஜீன் மாதம் முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஜெமிசன், சிகிச்சை பெற்றபோதும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் எவ்வளவு காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நியூசிலாந்து பயிற்சியாளர் கார் ஸ்டெட் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில், கைல் ஜேமிசன் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் அடியாக இருக்கும். இதை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பலமாக்கும் முயற்சியில் கைல் ஜேமிசனுக்கு பதிலாக இந்த 3 வீரர்களை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம். 


1. சந்தீப் சர்மா 



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெமிசனுக்கு பதிலாக முதல் வீரராக சந்தீப் சர்மா இடம்பெறலாம். கடந்த 2013 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் சந்தீப் சர்மாவை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இவரது அடிப்படை விலை ரூ. 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 104 போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் கொண்ட சந்தீப் சர்மா, பந்துவீச்சில் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் உதவுவார் என்று தெரிகிறது. சந்தீப் சர்மா இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.


2. ஆடம் மில்னே: 



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜேமிசனுக்குப் பதிலாக ஆடம் மில்னே தேர்வு செய்யக்கூடிய மற்றொரு வீரராக பார்க்கப்படுகிறார். மில்னே கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டும் களமிறங்கி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதுவரை இவர் ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் மில்னே ரூ. 2 கோடி அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டு எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. 


3. கிறிஸ் ஜோர்டான்



ஐபிஎல் 2023 இல் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் மூன்றாவது வீரர் கிறிஸ் ஜோர்டான். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான இவர், டி20 பார்மேட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல், இவரை ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சென்னை அணியால் கழட்டிவிடப்பட்டு கடந்த ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் ஜோர்டான் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டு எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.