ஐபிஎல் தொடரில் இந்த சீசனின் மிக முக்கியமாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்பது தான். அதற்கு ஏற்றவகையில் சென்னை அணியின் உள்ளூர் மேட்ச் மற்றும் வெளியூர் மேட்ச் என்ற பாகுபாடு இல்லாமல் ரசிகர்கள் மைதானத்தினை தோனியின் ரசிகராக நிரப்பி விடுகின்றனர். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தோனியும் அவ்வப்போது தனது ஓய்வு குறித்து சூசகமாக கூறி வருகிறார். ஆனால் இதற்கிடையில் தோனி தனக்குப் பிறகான சென்னை அணி மீண்டும் ஒரு சாம்ராஜியம் அமைத்திட தனது வீரர்களை தயார் படுத்தி வருகிறார். இவர்களால் ஐபிஎல் போன்ற பரபரப்பான போட்டியில் என்ன செய்திட முடியும்  என மற்ற அணி நிர்வாகம் ஆர்வம் காட்டிடாத வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அப்படி ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஹானேவைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 


இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டு இறுதியில் கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் ராஹானேவை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் தான். இதனால் அவர் அடிப்படை விலையான ரூபாய். 50 லட்சத்துக்கே விற்கப்பட்டார். இவரை அணியில் எடுத்த போது இவரை ஏன் சென்னை அணி எடுத்தது? ரஹானே ஒரு டெஸ்ட் ப்ளேயர், இவரை டி20யில் வைத்துக் கொண்டு சென்னை அணி என்ன செய்யப்போகிறது? என்பது மாதிரியான பல கேள்விகளை சென்னை அணி ரசிகர்களே சமூக வலைதளங்களில் ஆதாங்கப்பட்டு வந்தனர். 


ஆனால் ரஹானே மீதான கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில் எல்லாம், அவரது பேட்டில் இருந்து பறந்த சிக்ஸர்கள் தான். இதுவரை 5 போட்டிகளில் களமிறங்கியுள்ள ரஹானே ருத்ரதாண்டவமாடி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். 2008 ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் விளையாடி வரும் ரஹானே 2010ஆம் ஆண்டு மட்டும் விளையாடவில்லை. மீதமுள்ள 14 சீசன்களில் (அதாவது இந்த சீசனைத் தவிர) இவரது ஸ்ட்ரைக் ரேட் இந்த சீசனைப் போல் வேறு எந்த சீசனிலும் இல்லை என்றே கூறவேண்டும். இவரது அதிகபட்ச ஸ்ட்ரைக்ரேட் கடந்த 2019ஆம் ஆண்டு சீசனில் 137.89 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள ரஹானேவின் ஸ்ட்ரைக்ரேட் 199.05 ஆக உள்ளது. இவரது சிறப்பான ஆட்டத்தினால் சென்னை அணி, ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளாக விளங்கும் மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்த இரவது அதிரடி ஆட்டம் முக்கிய காரணம். இதுவரை இரண்டு அரைசதங்கள் விளாசியுள்ள ரஹானே, 18 பவுண்டரியும் 11 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். 


ரஹானேவின் ஆட்டம் இப்படி இருக்க, தோனி ரஹானேவைப் பற்றி கூறி வருவது அனைவரது மத்தியிலும் சென்னை அணிக்காக அவர் நீண்ட காலம் ஆடுவார் எனும் நம்பிக்கை எழுந்துள்ளது எனலாம்.