வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
அவருடைய அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக இருந்தது. அந்த விலைக்கே அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மினி ஏலம், கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர சொகுசு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 405 வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 273 பேர் இந்தியர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அனைத்து அணிகளிலும் சேர்த்து 87 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்த்து ரூபாய் 183.15 கோடியை கையிருப்பாக கொண்டு இந்த ஏலத்தை தொடங்கின.
முன்னதாக, நம்பர் 1 ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், சமீபத்தில் அர்ஜென்டீனா வீரர் மெஸ்ஸியின் ஜெர்ஸியை அணிந்து கால்பந்து விளையாடி சமூக வலைத்தளங்களில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, முதல் வீரராக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அடிப்படை ஏலத்தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்தாண்டு வரை ஐதராபாத் அணிக்கு விளையாடி வந்த இவர், ரூ.14 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தார். அதைதொடர்ந்து, அண்மையில் ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வில்லியம்சன், அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் எடுக்கப்பட்டார்.
அதைதொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளும் தீவிரம் காட்டின. இறுதியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை, ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆல்-ரவுண்டரான இவர் அண்மையில் நடந்த பாகிஸ்தான் உடனான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதியது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரரான மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. ஆனால் இறுதியில் அவரை ரூ.8.25 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு, மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.