ஐ.பி.எல். தொடரின் 46வது ஆட்டத்தில் நேற்று மும்பை – பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டத்தின் இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் 7 பந்துகள் மீதம் வைத்து மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளர் அர்ஷ்தீப்சிங் பந்துவீச்சை மும்பை வீரர்கள் நாலாபுறமும் விளாசினர். பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவியதற்கு அர்ஷ்தீப்சிங் மோசமாக பந்துவீசியதே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
அர்ஷ்தீப்சிங் மோசமான சாதனை:
அர்ஷ்தீப்சிங் நேற்றைய போட்டியில் மட்டும் 3.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 66 ரன்களை வாரி வழங்கினர். இதன்மூலம் அர்ஷ்தீப்சிங் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது, டி20 போட்டிகளின் விதிப்படி ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக தலா 4 ஓவர்கள் வீசலாம். இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். வரலாற்றிலே 4 ஓவர்களை நிறைவு செய்யாமல் ஒரு பந்துவீச்சாளர் அதிகளவில் ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை நேற்று அர்ஷ்தீப்சிங் படைத்தார். அது ஐ.பி.எல். வரலாறு மட்டுமின்றி டி20 வரலாற்றிலே மோசமான சாதனை ஆகும்.
ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் நான்கு ஓவர்களை நிறைவு செய்யாமல் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை பென் வீலர் தன்வசம் வைத்திருந்தார். அவர் 3.1 ஓவர்கள் பந்துவீசி 64 ரன்களை வழங்கியிருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் டாம் கரண், அலெக் டிசிஜியா 63 ரன்களுடன் உள்ளனர்.
மோசமான பந்துவீச்சு:
ஐ.பி.எல். வரலாற்றிலே அதிக ரன்களை வாரி வழங்கிய மோசமான பந்துவீச்சாளர் என்ற சாதனையை பாசில் தம்பி 70 ரன்களுடன் தன்வசம் வைத்துள்ளார். 2வது இடத்தில் யஷ்தயால் 69 ரன்களுடன் உள்ளார். பாசில் தம்பி கடந்த 201ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக பந்துவீசியபோது ஆர்.சிபி. வீரர்கள் அவரது பந்துவீச்சை விளாசினர். யஷ்துல் நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக குஜராத் அணிக்காக கடைசி ஓவரை வீசியபோது ரிங்குசிங் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியதால் அந்த மோசமான சாதனை பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.
மும்பை அணிக்கு எதிராக நேற்று முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி லிவிங்ஸ்டன், ஜிதேஷ்சர்மா அதிரடியால் 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 ரன்களை எடுத்தார். ஜிதேஷ்சர்மா 27 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 49 ரன்களை விளாசினார். 215 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா டக் அவுட்டானாலும் இஷான்கிஷான் 75 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 66 ரன்களையும் விளாசினர். கடைசியில் திலக் வர்மா 10 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 26 ரன்களை விளாசியதால் மும்பை த்ரில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: IPL 2023: விக்கெட்டும் எடுத்து, ரன்னை விட்டுகொடுத்தா எப்படி? மோசமான சாதனையில் துஷார் தேஷ்பாண்டே முதலிடம்!
மேலும் படிக்க: Johnson Charles KKR: இனி கொல்கத்தா அணியில் இவர் இல்லை.. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம்..! யார் தெரியுமா?