ஐபிஎல் போட்டி என்றாலே பல இளம் திறமைகள் உலகிற்கு தெரியவரும். அதிலும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் மிகவும் திறமையான வீரரை அடியாளம் கண்டு அவர்களை தங்களது அணியின் நட்சத்திரமாக உருவாக்குகின்றனர். அப்படி கொல்கத்தா அணி உருவாக்கியுள்ள நட்சத்திரம் தான் ரிங்கு சிங். இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் பேசப்படும் வீரர்களில் ரிங்கு சிங்கும் ஒருவர். காரணம் இக்கட்டான சூழலில் அனைத்து பொறுப்புகளையும் தன் தோளில் ஏந்திக் கொண்டு அணியை வெற்றி பெறவைக்கிறார். 


குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி ஐந்து பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைக்கும் வரை ரிங்கு சிங்கை யாரும் பெரிய வீரராக கருதவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறயது. களத்தில் அவர் இருக்கிறார் என்றால் கொல்கத்தா அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என அனைவரும் கூறும் வகையில் அவரது ஆட்டம் உள்ளது. 


நேற்றைய (மே, 8) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் முதல் பந்தை டாட் பாலாக வீச, இரண்டாவது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தை எதிர் கொண்ட ரிங்கு சிங் ஒரு ரன் எடுக்க, போட்டியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. நான்காவது பந்தை எதிர் கொண்ட ரஸல் பந்தை தூக்கி அடிக்க அது பவுண்டரிக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் ரஸல் ரன் அவுட் ஆக, கடைசி பந்தில் இரண்டு ரன்கள் வெற்றிக்கு தேவை என இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங்  அதனை பவுண்டரியாக மாற்றி அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


இந்த போட்டிக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரஸல் கூறியதாவது, ”ஐந்தாவது பந்தை உங்களால் அடிக்க முடியவில்லை என்றால் சிங்கிள் ஓடுவீர்களா என ரிங்கு சிங் என்னிடம் கேட்டார். அதற்கு நான், நிச்சயமாக ரிங்கு எனக்கு உன்மீது முழு நம்பிக்கை உள்ளது எனக் கூறினேன். ரிங்கு மறுமுனையில் இருக்கும் போது என்மீதான அழுத்தம் குறைகிறது. இந்த சீசனில் அவர் செய்துள்ள விஷயங்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன” எனக் கூறினார். 


அதேபோல் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கூறும் போது, ”நான் கொல்கத்தா மைதானத்தில் ரஸல்.. ரஸல் என ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் தற்போது அனைவரும் ரிங்கு.. ரிங்கு என ஆரவாரம் செய்வதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.