விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி, ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இவர்கள் யாரும் இல்லாமல் நடைபெறும் 2 வது ஐபிஎல் இறுதிப் போட்டி இதுவாகும்.
ஐபிஎல் இறுதியில் தோனி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் சென்னை அணி சார்பில் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021 உள்ளிட்ட ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இவை தவிர 2017ஆம் ஆண்டு புனே அணிக்காக விளையாடி தோனி ஐபிஎல் இறுதிப் போட்டியில் களமிறங்கினார்.
ஐபிஎல் இறுதியில் ரோகித் சர்மா:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்ற வீரர் என்ற பெருமையை வைத்துள்ளார். இவர் மும்பை அணிக்காக 5 முறையும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும் வென்றுள்ளார்.
ஐபிஎல் இறுதியில் கோலி:
ஆர்சிபி அணிக்காக 15 சீசன்களில் களமிறங்கிய விராட் கோலி 2009 மற்றும் 2016 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
தோனி,கோலி,ரோகித் மூவரில் ஒருவர் இல்லாத இறுதிப் போட்டி:
2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் தோனி, கோலி, ரோகித் சர்மா ஆகிய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதற்கு பின்பு இரண்டாவது முறையாக இவர்கள் இல்லாமல் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்