ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது வரை 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ளது.
ஆகவே ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்துடன் இன்று வெற்றி பெற்றாலும் ஆர்சிபி அணி தற்போது உள்ள ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் டெல்லி அணி தன்னுடைய கடைசி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய கடைசி போட்டியில் பஞ்சாப் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளாகவே ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளசிஸ் மற்றும் தினேஷ் கார்த்தி ஆகிய இருவரும் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். மேக்ஸ்வேல் மற்றும் ராஜாட் பட்டிதார் ஆகியோர் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும் அதை நல்ல ஸ்கோராக மாற்ற தவறி வருகின்றனர். இதனால் ஆர்சிபி அணியின் பேட்டிங் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை வனிந்து ஹசரங்கா மற்றும் ஹர்ஷல் பட்டேல் நன்றாக பந்துவீசி வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 22 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்துவிடும். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்