ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பெங்களூரு அணிக்காக கோலியும், டு ப்ளெசியும் ஓப்பனிங் களமிறங்கினர். யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, 7 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து, ரஜத் பட்டிதர் களமிறங்கினார். டு ப்ளெசியும், ரதட் பட்டிதரும் சேர்ந்து நிதானமாக ரன் சேர்த்தனர்.
25 ரன்கள் எடுத்திருந்தபோது டு ப்ளெசி அவுட்டாக, மேக்ஸ்வெல் அடுத்து களமிறங்கினார். வந்த வேகத்தில் அதிரடியாக ஆடிய அவர், 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அவுட்டாகினார். சிறப்பாக விளையாடி வந்த ராஜாத் பட்டிதார் 42 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 58 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 18 ஓவர்களில் ஆர்சிபி அணி 146 ரன்கள் எடுத்திருந்தது.
அதற்கு அடுத்த பந்தில் ஹசரங்கா அவுட்டாகினார். இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மெக்கோய் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
வரலாறு சொல்வது என்ன?
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான்ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 25 முறை மோதியுள்ளன. அவற்றில் ஆர்சிபி அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 5 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் ஒரு முறையும், ஆர்சிபி அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது வரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 718 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரும் 421 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் சாஹல் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் ராஜஸ்தான் அணி சம பலத்துடன் உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்