மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணியின் வீரர்கள் அனுஜ் ராவத், முன்னாள் கேப்டன் விராட்கோலி அடுத்தடுத்து அவுட்டாகினர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க 62 ரன்களுக்கு பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால், மறுமுனையில் நின்ற கேப்டன் பாப்டுப்ளிசிஸ் பொறுப்புடன் ஆடினர். விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய பாப்டுப்ளிசிஸ் பொறுப்புடன் ஆடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 96 ரன்களை விளாசினார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் பெங்களூர் அணி 181 ரன்களை விளாசியது. டுப்ளிசிஸ் மட்டும் 64 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸரை விளாசியிருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பந்து மீதமிருந்த நிலையில் டுப்ளிசிஸ் ஆட்டமிழந்தார்.
பெங்களூர் கேப்டன் டுப்ளிசுக்கு இது 107வது ஐ.பி.எல். போட்டி ஆகும். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு இதுதான் 100வது ஐ.பி.எல். போட்டி ஆகும். டுப்ளிசிஸ் இன்று விளாசிய 96 ரன்களே ஐ.பி.எல். போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியின் தூணாக விளங்கிய பாப் டுப்ளிசிஸ் கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பாப் டுப்ளிசிஸ் ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 3 ஆயிரத்து 185 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 24 அரைசதங்கள் அடங்கும். இதில் 288 பவுண்டரியும், 105 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
இதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான 37 வயதான பாப் டுப்ளிசிஸ் ஒருநாள் போட்டியில் 5 ஆயிரத்து 507 ரன்களையும், 69 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 163 ரன்களையும், 50 டி20 போட்டிகளில் 1,528 ரன்களையும் விளாசியுள்ளார். டெஸ்டில் 10 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 12 சதங்களையும் விளாசியுள்ளார். டுப்ளிசிஸ் இந்த தொடரில் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இன்று அடித்தது ஆகும்.
டுப்ளிசின் சிறந்த ஆட்டத்தால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டுப்ளிசிசை பாராட்டி வருகின்றனர். மேலும், இன்றைய போட்டியை கே.ஜி.எப். பட பிரபலங்கள் நடிகர் சஞ்சய் தத், ரவீனாடான்டன் ஆகியோர் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்