நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இருந்து வந்தார். இந்நிலையில் ஜடேஜா தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதால் அவர் தன்னுடைய கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் அளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. அவருடைய பரிந்துரையை தோனி ஏற்று கொண்டதால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நடப்புத் தொடரில் தோனி செயல்பட உள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதன்படி, ”ரவீந்திர ஜடேஜா தன்னுடைய ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவை அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தோனியை அணியை வழிநடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதை தோனி ஏற்றார். ஆகவே இனிவரும் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளது.
நடப்புத் தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். நடப்புத் தொடரில் சென்னை அணி தொடக்கத்தில் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. அப்போது முதல் ஜடேஜாவின் கேப்டன்சி தொடர்பாக பல புகார்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தொடரின் பாதியில் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளை பெற்றுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. சென்னை அணி நாளை நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாளைய போட்டியில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட உள்ளது சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்