ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்லர் மற்றும் படிக்கல் மிகவும் நிதானமாக ஆடினர்.
தேவ்தத் படிக்கல் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் 6 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த போது சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கருண் நாயர் 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அனுகுல் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். இவர் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் 200 பவுண்டரிகளுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 105 ரன்கள் எடுத்தது. இதன்காரணமாக கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது ஆட்டத்தின் 16-வது ஓவரை வீசிய சுனில் நரேன் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். அதற்கு அடுத்த ஓவரில் அதிரடியாக ஆடி வந்த ரியான் பராக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிம்ரன் ஹெர்ட்மேயர் அதிரடி காட்டினார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்