ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் மயாங்க் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 


அடுத்த வந்த லியாம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. 7ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பெர்ஸ்டோவ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் ஜித்தேஷ் மட்டும் சற்று நிதானமாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


 






பின்னர் வந்த ரபாடா 2 ரன்களிலும், நாதன் எலிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 15 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் நம்பிக்கையாக இருந்த ஷாரூக் கானும் 20 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி சார்பில் குல்தீப், அக்சர், கலீல் அகமது மற்றும் லலீத் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.  இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பஞ்சாப் அணி மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்கள் எடுத்திருந்தது குறைவான ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண