அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் வெளியாகின. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர். இதன் மூலம் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.


இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்கள் தக்கவைப்பது மற்றும் வீரர்கள் ஏலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆங்கில கிரிக்கெட் செய்தி தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களின் ஏலம் நடைபெறும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. 




மேலும் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதாவது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்கள் என தக்கவைத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அது தவிர எஞ்சிய வீரர்களிலிருந்து புதிதாக வந்துள்ள இரண்டு அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தற்போது இருக்கும் அணிகள் மற்றும் புதிதாக வந்துள்ள அணிகளிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இந்த விதிகளுக்கு அந்த அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த விதிகள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதில் ஒரு குழப்பம் உள்ளது. அதாவது மீதமுள்ள வீரர்கள் என்றால் தற்போது அணிகளில் இருந்த வீரர்கள் மட்டுமா? அல்லது ஐபிஎல் தொடருக்கு பதிவு செய்யும் அனைத்து வீரர்களுமா என்பதில் தெளிவு இல்லை. 




கடைசியாக 2018ஆம் ஆண்டு பெரியளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு அணியும் தலா 85 கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவு செய்ய அணுமதிக்கப்பட்டனர். அதிலிருந்து தற்போது 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2022 ஏலத்தில் இந்த கார்டு பயன்பாடு இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த கார்டை பயன்படுத்தி ஏற்கெனவே இருந்த அணி அந்த வீரரை ஏலத்தில் திரும்பி வாங்க முடியும். அந்த சலுகை இம்முறை இருக்காது என்று கணிக்கப்படுகிறது. 


அதேபோல் இரண்டு புது அணிகள் உள்ள நிலையில் அதில் எந்த அணிக்கு முதலில் வீரர்களை தக்கவைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரியவில்லை. அதிகமாக ஏலத்தில் அணி எடுத்த லக்னோவிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அகமதாபாத் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது தெரியவில்லை. இவை அனைத்தும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விதிகளை அறிவித்த உடன் தெளிவாகும் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: இது சரியா, தவறா.? முழு பிஸினஸாக மாறும் ஐபிஎல்.. என்ன சொல்லப்போகிறது எதிர்காலம்?