நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஐந்து முறை ஐ.பி.எல்.-இல் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.இந்தாண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் வெற்றிக்கணக்கைத் தொடங்கவில்லை. தோல்வியில் துவண்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு, அதன் உரிமையாளர் நீடா அம்பானி (Nita Ambani) உற்சாகமளிக்கும் வார்த்தைகள் மூலம் நம்பிக்கையூட்டி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அணி வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீடா அம்பானி, ”நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றியோ, தோலிவியோ, அணி நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்கிறார் நீடா அம்பானி.
இதுதொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ நீட்டா அம்பானி அனுப்பிய ஆடியே மெசேஜை வீரர்கள் அனைவரும் கேட்கும்படியாக இருக்கிறது.
வீரர்களுக்கு அனுப்பிய நீடா அம்பானியின் ஆடியோவில்,’ ''எனக்கு உங்கள் அனைவரின் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நாம் வெற்றி அடைவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தச் சூழலை நாம் கடந்து வருவோம். தற்போது, நாம் தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கையை கைவிட்டுவிடக் கூடாது. இனி நாம் உயரப்போகிறோம். நாம் ஜெயிக்கப் போகிறோம் என்பதை நாம் நம்ப வேண்டும். இதுபோன்ற நிலையை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். பின்னர் முன்னேறி கோப்பையை வென்றுள்ளோம். நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் நாம் இம்முறையும் கோப்பையை வெல்ல முடியும்.
அணியில் உள்ள ஒவ்வொருவரும் மற்றொருவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் உங்களைச் சந்திப்பேன். அதுவரை, உங்கள் அனைவருக்கும் எனது முழு ஆதரவு உண்டு. ஒருவரை ஒருவர் நம்புங்கள், உங்கள் மீது நம்பிக்கை உடன் இருங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்" என்று கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது போலவே, அப்போதும் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றது. முதல் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியை அடுத்து ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. மும்பை இனி அவ்வளவுதான், வெளியேறிவிட்டது என்பதே அனைவரின் மனதிலும் இருந்தது. ஆனால், அபாராமாக விளையாடி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. பிளே-ஆப் சுற்றில் மும்பை வெளியேறியது என்றாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
போலவே, 2015 ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியையே சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று முன்தினம் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணி, இம்முறை தொடர்ச்சியாக 4வது தோல்வியை பெற்றது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்