சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்காக அணிகள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதுநாள் வரை இருந்த அணிகளோடு புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் பலர் பல்வேறு அணிகளுக்கு மாறியுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் பயிற்சியினை மேற்கொண்டு வந்தது. 15 நாள்களாக நடைபெற்று வந்த பயிற்சியினை முடித்துக்கொண்டு மும்பை புறப்பட்டது சென்னை அணி. இறுதி நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ஒரு காணொளி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக பேசுவதாக கூறிய ஜடேஜா, குஜராத்தில் மைதானம் நன்றாக இருந்ததாகவும், குஜராத்தில் விளையாடும் போது குஜராத் ரசிகர்கள் தங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். சென்னை அணியில் தோனி இருக்கும்போது ஜடேஜாவை எதற்காக சென்னை அணி முன்னிலைப் படுத்துகிறது என்று நேற்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனிக்கு பதிலாக ஜடேஜா வழிநடத்துவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க தோனி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜடேஜா 2012ம் ஆண்டில் இருந்து சென்னை அணியில் இடம்பெற்றிருப்பதாகவும், சென்னை அணியை வழிநடத்தப்போகும் 3வது வீரர் இவர்தான் என்று கூறியுள்ளது. அதோடு, இந்த தொடர் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக தோனி தொடர்வார் என்று கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தோனி என்கிற நபர் மட்டுமே. கடந்த 2008ம் ஆண்டு அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். 5 முறை அந்த அணி இறுதி வரை சென்று சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு முறை சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றிருக்கிறது. ஐபிஎல்லில் சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் இப்படி ஒரு ட்ராக் ரெக்கார்ட் இல்லை. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 204 போட்டிகளை எதிர்கொண்டு 121 போட்டிகளில் வெற்றியும், 82 போட்டிகளில் தோல்வியையும் பெற்றிருக்கிறது. தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவிகிதம் 59.60 சதவிகிதமாக உள்ளது. ஐபிஎல்லில் ஒரு அணியை அதிக போட்டிகளில் வழிநடத்தியவர் தோனி மட்டும் தான். சென்னைக்கு போட்டியாக கருதப்படும் மும்பை அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா கூட 129 போட்டிகளில் தான் வழிநடத்தியிருக்கிறார். விராட் கோலி 140 போட்டிகளில் வழிநடத்தியிருக்கிறார். 200 போட்டிகளுக்கு மேல் ஒரு அணியை வழிநடத்திய பெருமை தோனியைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது என்றே கூறலாம்.
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் தோனி ஒப்படைத்திருப்பதால் ரசிகர்கள் கலக்கமடைந்திருக்கின்றனர். காரணம் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார் என்றால் விரைவில் அதில் இருந்து விலகப்போகிறார் என்று அர்த்தம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டானாக இருந்த போது அந்த பொறுப்பை கோலியிடம் ஒப்படைத்தார் தோனி. பின்னர், ஒரு நாள் போட்டியின் கேப்டன் பொறுப்பையும் கோலியிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண வீரராகவே விளையாடினார் தோனி. தலைவன் என்பவன் தான் இருக்கும் வரையில் தான் மட்டுமே தலைவனாக இல்லாமல், தனக்குப் பிறகும் வழிநடத்த ஒரு ஆளுமையை உருவாக்குவது தான் ஒரு நல்ல தலைவனின் பண்பு. அந்த அடிப்படையில் தான் கோலியை இந்திய அணிக்காக உருவாக்கினார் தோனி. தோனி ஓய்வுபெற்ற பிறகும் கூட இந்திய அணி பெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு கோலியை தோனி தயார் படுத்தியதே முக்கிய காரணம். இதை பல்வேறு தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கிறார் கோலி.
அதைப்போல தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஜடேஜாவிடம் ஒப்படைத்திருக்கிறார் தோனி. அணியில் சாதாரண வீரராக விளையாடுவதோடு, ஜடேஜாவை அணியில் இருந்தே வழிநடத்துவார். என்னதான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணியை வழிநடத்தினாலும், சென்னை அணியில் தோனி இருக்கிற வரை ரசிகளுக்கு என்றைக்கும் அவர் தான் கேப்டன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்