நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி குறித்து பேசிய ஹர்பஜன் சிங் இந்தியா பாகிஸ்தான் போட்டி போல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் வருகை, முழு ஏலத்துக்கு பிறகு மாறிய கிரிக்கெட் அணிகளுடன் இந்த போட்டி நடந்து வருவதால் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து இந்த தொடர் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.
முந்தைய ஐ.பி.எல். தொடர்கள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த ஐ.பி.எல். தொடரில் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் போட்டிபோட்டு தோல்வியடைந்தது இரு அணி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. சினிமாவில் விஜய் - அஜித் போல் பேசப்பட்டு வந்த மும்பை - சென்னை அணிகள் இரண்டும் இம்முறை தோல்வியில் போட்டிபோட்டு வருகின்றன.
முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி 5 வது போட்டியில் வென்றவுடன் மீண்டு வந்துவிட்டோம் என அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்ப்பரிக்க தொடங்கினர். ஆனால், அடுத்த போட்டியில் தோற்று அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது.
மறுபக்கம் பல்தான்ஸ் என்று பெருமையாக அழைக்கப்பட்டு வந்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை அந்த அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றிபெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அதே நேரம் மும்பையிலிருந்து சென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலிடத்தையும், சென்னையிலிருந்து சென்ற டூபிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணி 2 வது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இன்று மும்பை - சென்னை இடையிலான போட்டியை மையமாக கொண்டு சமூக வலைதளங்களில் மீம்களை ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இதனால் இவ்விரு அணிகளின் பிளேஆஃப் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 9 ஐபிஎல் கோப்பைகளை வென்ற இவ்விரு அணிகளும் புள்ளிபட்டியலில் 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இதேபோல் தங்கள் அணிக்கான முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி மும்பையில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இந்த சீசனில் முதல் முறை நேருக்கு நேர் மோதுகின்ற நிலையில், இதுகுறித்து ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போன்ற உணர்வை தருகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, "நான் மும்பை அணியிலும் விளையாடி இருக்கிறேன். சென்னை அணியிலும் விளையாடி இருக்கிறேன். இரண்டுமே எனக்கு முக்கியமான அணிகள். நான் மும்பையில் இருந்து வெளிவந்து சென்னையில் இணைந்து விளையாடியபோது, இரண்டு அணிகளும் மோதினால் அத்தனை பிரஷராக இருக்கும். இப்போதும் அது தொடர்கிறது." என்று கூறினார்.