மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ரஹானே முதல் ஓவரிலே 2 ரிவியூவில் வாழ்வு பெற்றார். ஆனாலும், அவர் 8 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர் அடித்து அசத்திய வெங்கடேஷ் அய்யர் 8 பந்தில் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும்- நிதிஷ் ராணாவும் அதிரடியாக ஆடினர்.




குறிப்பாக ஸ்ரேயாஸ் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விளாசினார். அவருக்கு நிதிஷ் ராணாவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். அணியின் ஸ்கோர் 107 ரன்களை எட்டியபோது நிதிஷ் ராணா 20 பந்துகளில் 3 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து சில நிமிடங்களில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் விளாசிய அடுத்த பந்திலே அவர் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பிட் ஆனார். அவர் 33 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 54 ரன்களில் வெளியேறினார்.


பின்னர், இறங்கிய சாம்பில்லிங்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்மின்ஸ் களமிறங்கினார். முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய பாட்கம்மின்ஸ் குல்தீப் யாதவ் ஓவரில் எல்.பி.டபுள்யூ ஆனார். ஒரு முனையில் ரஸல் கொல்கத்தாவிற்காக நின்றாலும் மறுமுனையில் வலுவான வீரர்கள் யாரும் இல்லாததால் கொல்கத்தா அணி தடுமாறியது. 




சுனில் நரைன் 4 ரன்களிலும், உமேஷ் யாதவ் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினார். இந்த நிலையில், 9வது விக்கெட்டாக ரஸலும் 21 பந்தில் 3 பவுண்டரியுடன் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.




டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகுளை சாய்த்தார். கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா முதலிடத்திலே உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண