கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இரண்டு இடங்களைப் பிடிக்க அதிக நிறுவனங்கள் போட்டியிட்டதால், கடுமையான போட்டி நிலவியது. ஏலத்தில் இறுதியாக குஜராத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய இரண்டு நகரங்களை மையமாக கொண்டு புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட அணியை சி.வி.சி. கேப்பிடல் நிறுவனமும், லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன. 


இரு அணிகள் விவரம்:


உத்தர பிரதேச மாநிலத்தை மையமாக கொண்டு ஒரு ஐபிஎல் அணி அறிமுகமாவது இதுவே முதல் முறை. குஜராத்தை பொருத்தவரை, குஜராத் லயன்ஸ் என்ற அணி இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தன. இதனால், குஜராத்தில் இருந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் அணி அறிமுகமாக உள்ளது.


லக்னோ அணி - ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனம் - 7090 கோடி ரூபாய்


கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் நிறுவனமான ஆர்.பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் லக்னோ அணியை வாங்கியுள்ளது. ஏற்கனவே, பூனே சூப்பர் ஜியண்ட்ஸ் என்ற ஐபிஎல் அணியை வாங்கி இருந்த இந்த குழு, இரண்டாவது முறையாக ஐபிஎல்லில் கால் பதித்துள்ளது. 2011-ம் ஆண்டு முதல் இயங்கி ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனம் சர்வதேச அளவில் பிஸினஸை விரிவாக்கம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 50,000 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். 


சி.இ.எஸ்.இ லிமிடட், ஹல்டியா, தரிவால், சூர்யா வித்யுட், க்ரெஸெண்ட் போன்று 7 பவர் கம்பெனிகளும், ஐடி சேவை வழங்கும் ஃபர்ஸ்ட் சோர்ஸ் நிறுவனத்தையும், சரிகம, ஃபார்ச்யூன், ஓப்பன், எடிட்டர் ஜி போன்ற மீடியா நிறுவனங்களும், எவிட்டா, ஸ்பென்சர்ஸ், நேச்சர் பாஸ்கட் என உணவு விற்பனை துறையிலும் உரிமை பெற்றுள்ளது. இதை தவிர, கொல்கத்தாவின் உள்ள குவெஸ்ட் மால் என பிரமாண்டமான ஷாப்பிங் மால் நிறுவியுள்ளது.  



அகமதபாத் அணி - சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் - 5635 கோடி ரூபாய்


சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் விளையாட்டு துறையில் அறிமுகமாவது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஃபார்முலா ஒன் தொடர் விளையாட்டில் பங்குகளை கொண்டுள்ளது. இப்போது ஐபிஎல் அணியை ஏலம் எடுத்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய கண்டங்களில் தனது பிஸினஸை விரிவுப்படுத்தி இருக்கும் சி.வி.சி கேப்பிடல் நிறுவனம், உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் உள்ள 73 நிறுவனங்களில் பங்குகளை முதலீடு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட இந்த 73 நிறுவனங்களில் 3,00,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். 1981-ம் ஆண்டு அறிமுகமான சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் 30 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து பிஸினஸில் அடுத்த கட்டத்தை சென்றே கொண்டே இருக்கின்றது. 


2022 ஐபிஎல் எப்படி இருக்கும்?


2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால் ஐபிஎல் தொடரில் போட்டி அதிகமாவது உறுதியாகிவிட்டது. விதிமுறைகளும், தொடர் ஃபார்மெட்டும் அதற்கு ஏற்பது போல மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் சொந்த மன்னில் 7 போட்டிகளும், வெளி மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாட உள்ளன. இதனால், ஒவ்வொரு அணியும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்பு 14 போட்டிகளில் பங்கேற்கும். இம்முறை 2011 ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்ட க்ரூப் முறை ஃபாலோ செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண