IPL 2022, LSG vs SRH: மும்பை, டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை குவித்தது. 170 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு  வில்லியம்சனும், அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.


இருவரும் ஓரிரு ரன்களாக எடுத்தநிலையில், கேப்டன் வில்லியம்சன் 16 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தவுடன் அபிஷேக் சர்மாவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரையும் ஆவேஷ்கான் அவுட்டாக்கினார். பின்னர், களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினர். மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி பவுண்டரிகளாக அடித்தார்.




அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த மார்க்ரம் 14 பந்தில் 12 ரன்கள் எடுத்தபோது குருணல் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து நிகோலஸ் பூரண் களமிறங்கினார். ராகுல் திரிபாதி மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த ராகுல்திரிபாதி அணியின் ஸ்கோர் 95 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களில் குருணல் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.


36 பந்தில் சன்ரைசர்சின் வெற்றிக்கு 65 ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்டதால், நிகோலஸ் பூரண் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதையடுத்து, சன்ரைசர்சின் வெற்றிக்கு 30 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற சூழல் உருவாகியது. சன்ரைசர்சின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்து வந்தனர்.   இருப்பினும் கடைசி கட்டத்தில் நிகோலஸ் பூரண் மிகவும் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.




ஆனால், ஆவேஷ்கான் வீசிய 18வது ஓவரில் 24 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் நிகோலஸ் பூரண் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அப்துல் சமத்தும் டக் அவுட்டாகினார். இதனால், ஆட்டம் லக்னோ அணியினர் கைக்கு சென்றது. கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்திற்கு சென்றது.


கடைசி ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். அவரது பந்தில் வாஷிங்டன் சுந்தரும் 18 ரன்களில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து புவனேஷ்குமாரும் ஆட்டமிழந்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


லக்னோ பந்துவீச்சாளர் ஆவேஷ்கான் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் வில்லியம்சன் மற்றும் நிகோலஸ் பூரண் விக்கெட்டுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண