2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணி தோனியின் அரைசதம் கடந்ததால் 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 132 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க முதலே அதிரடி காட்ட தொடங்கினர். இதன்காரணமாக 6 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 43 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த நிதிஷ் ரானா 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ரஹானே 44 ரன்கள் எடுத்திருந்தப் போது சாண்டனர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் கொல்கத்தா அணி தொடர்ந்து ரன்களை சேர்த்து வந்தது. அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 22 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் சென்னை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக சென்னை அணி 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதன்பின்னர் தற்போது தான் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்