ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் அணியுடன் குஜராத் அணி மோத இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஜாம்பவான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ஐபிஎல் 2022 இன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சதம் கடந்ததன் மூலம் ஜோஸ் பட்லர் நடப்புத் தொடரில் 4ஆவது சதத்தை பதிவு செய்து 824 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும், ஆரஞ்சு கோப்பையை தன் வசமாகியுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் 2022 தொடரில் வார்னரின் ரன் எண்ணிக்கையான 848 ரன்களை முறியடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லருக்கு 25 ரன்கள் தேவையாக உள்ளது. கடந்த 2016 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டைட்டில் வென்ற சீசனில் வார்னர் 848 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஜோஸ் பட்லர் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் 25 ரன்கள் எடுத்தால் வார்னரின் சாதனையை முறியடித்து ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு செல்வார். இந்த பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடனும் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரில் ஒரு விக்கெட்டை வீழ்த்துவதன் மூலம் ஊதா நிற தொப்பியை கைப்பற்றுவார். சாஹல் 15வது சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்துவதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இணைவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்