ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா 57 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ஆகியோர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் குவித்தது. 


 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த மிட்சல் மார்ஷ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் லலீத் யாதவ் டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 


 






சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி 42 ரன்கள் எடுத்தார். அவர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து லலீத் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்‌ஷர் பட்டேல் 24 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 15 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. கடைசி 24 பந்தில் டெல்லி அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டது. 


 


அப்போது களத்தில் இருந்த ரோவ்மன் பவல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 16 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 33 ரன்கள் விளாசி அசத்தினார். இதன்காரணமாக டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண