ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மேலும் ஒரு பெரிய சிக்கல் வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இந்தியா வருவதற்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர் முதல் போட்டியில் களமிறங்குவது மிகுந்த சந்தேகமாகியுள்ளது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சி.இ.ஒ காசி விஸ்வநாதன் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதன்படி, “மொயின் அலி கடந்த 28ஆம் தேதியே இந்தியா வருவதற்கு விசா பெற விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் இன்னும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவர் இதன்காரணமாக அவர் இந்தியா வராமல் இருக்கிறார். இந்த விவாகரத்தில் தலையிட பிசிசிஐயிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆகவே விரைவில் அவருக்கு விசா பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று கருதுகிறேன். விசா பிரச்னை சரியான உடன் மொயின் அலி அடுத்த விமானத்தில் இந்தியாவிற்கு வந்துவிடுவார்” எனக் கூறியுள்ளார்.
மொயின் அலி வரும் திங்கட்கிழமை இந்தியா வரும் பட்சத்தில் அவர் மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின்னர் அவருக்கு மீண்டும் கொரோன பரிசோதனை எடுத்தப்பிறகு பயிற்சியில் ஈடுபட முடியும். ஆகவே அவர் வெள்ளிக் கிழமை தான் பயிற்சியில் ஈடுபட முடியும். சனிக்கிழமை சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஆகவே அந்தப் போட்டியில் மொயின் அலி விளையாடுவதில் சிக்கல் ஏற்படுத்துள்ளது. ஏற்கெனவே காயம் காரணமாக தீபக் சாஹர் சென்னை அணியில் விளையாடுவது சிக்கலாக உள்ளது. காயத்தில் மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் விளையாடுவதும் சந்தேகமாக உள்ளதாக சென்னை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்