ஐபிஎல் 2022(IPL 2022) தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இந்தத் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணியின் உரிமையாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) வரும் ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலத்தில் யார் யாரை குறிவைக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி மீண்டும் தீபக் சாஹர், டூபிளசிஸ், ஷர்துல் தாகூர் ஆகிய மூன்று பேரை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி நிர்வாகம் சார்பில் சென்னையில் ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ஏற்கெனவே நீண்ட நாட்கள் சென்னை அணியில் விளையாடிய வீரர்கள் சிலரை மீண்டும் எடுக்க அந்த அணி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணி இத்தனை நாட்கள் இந்த வீரர்களுடன் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களை மீண்டும் எடுக்க அணி நிர்வாகம் ஏலத்தில் முக்கியத்துவம் அளிக்க உள்ளது. அந்தவகையில் மீண்டும் டூபிளசிஸ், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று பேரையும் இவர் குறிவைக்க உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக சிஎஸ்கே ஏற்கெனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்பின்னர் கடந்த வாரம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தோனி சென்னை வந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தாஜ் கோராமெண்டல் ஹோட்டலுக்குள் தோனி எண்ட்ரியாகும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக வைரலானது.
அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்களை பொறுத்தவரை எப்போதும் தோனி தான் எங்களுடைய கேப்டன். கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அவர் தான் எடுப்பார். அவர் அதை அறிவிக்கும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தான் கேப்டன். தற்போது எங்களுடைய முழு கவனம் ஐபிஎல் ஏலத்தின் மேல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 1000வது ஒரு நாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி