2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியில் மொயின் அலி இடம்பெறவில்லை.


 


சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே 3 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. 


 


அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 8ஆவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ராபின் உத்தப்பா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அம்பத்தி ராயுடுவும் 15 ரன்களுக்கு ரன் அவுட் ஆகினார். இதன்காரணமாக சென்னை அணி 9 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த சிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 61 ரன்களுக்குள் சென்னை அணி 5 விக்கெட் இழந்து தடுமாறியது. 


 


அப்போது களத்திற்கு சென்னை அணியின் தல தோனி வந்தார். அவரும் ஜடேஜாவும் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இருவரும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 15 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 


 


கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஆட்டத்தின் 18ஆவது ஓவரில் தோனி 2 பவுண்டரிகளும், ஜடேஜா ஒரு பவுண்டரியும் அடித்தனர். அதன்பின்னர் 19ஆவது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசினார். இறுதியில் சென்னை 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் சுமார்56 டாட் பந்துகள் வரை பிடிக்கப்பட்டது. இதுவே சென்னை அணியின் குறைவான ஸ்கோருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதன்மூலம் இந்தத் தொடரின் முதல் போட்டியிலே தல தோனி அரைசதம் கடந்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண