சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு பட்டங்களை பெற்று தந்தவர் எம். எஸ் தோனி, ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். 40 வயதான தோனி ஐபிஎல் தொடரில் தனது ஓய்வு காலத்தை நெருங்கி வருவதால், சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அல்லது மொயீன் அலியை கொண்டு வரலாம் என்ற கருத்து பரவியது. 


இதையடுத்து, இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த தொடர் முதல் எம். எஸ். தோனிக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஜடேஜா, இதுவரை ஐபிஎல் தொடரில் கடந்த வந்த பாதையை கீழே பார்க்கலாம். 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி : 


இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. அந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை தட்டித்தூக்கியது. அப்பொழுது அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா ஒரு முக்கியமான அங்கம் வகித்தார். இதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனான ஷேன் வார்னே ஜடேஜாவை “ராக்ஸ்டார்” என்று அழைத்தார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் : 


2008-2009 ம் ஐபிஎல் தொடரில் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜா, கடந்த 2011 ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக களமிறங்கினார். தொடர்ந்து, 2012 ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 2012 முதல் 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


இதையடுத்து, ஸ்பாட் பிக்ஸிங் காரணமாக கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து, அந்த இரண்டு ஆண்டு காலங்கள் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணியில் ஜடேஜா விளையாடினார். 


பிறகு, தடைக்கு பிறகு மீண்டும் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2018 மற்றும் 2021 ம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. இந்த இரண்டு தொடர்களிலும் சென்னை அணி கோப்பையை வெல்ல இவர்தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 


கேப்டன் அவதாரம் : 


கடந்த 2020 ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மோசமான நிலையில் வெளியேறியது. இதையடுத்து, சென்னையின் தோல்விக்கு தோனிதான் முக்கிய காரணம் என்றும், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கருத்துகள் பரவியது. தொடர்ந்து, ரெய்னா அல்லது ஜடேஜாவை கேப்டனாக வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 


தன்னிலையை விட்டுகொடுக்காத தோனி, தான் யார் என்று நிரூபித்து கோப்பையும் பெற்று தந்தார். அப்பொழுது தோனிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் ஜடேஜா. அதன் பலனமாக தோனிக்கு பிறகு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கான இடமும் அளித்தது சென்னை நிர்வாகம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண