ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர்.
ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி இன்று சென்னை வந்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தோனி சென்னை வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தாஜ் கோராமெண்டல் ஹோட்டலுக்குள் தோனி எண்ட்ரியாகும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களை சென்னை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருவதால் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்களை பொறுத்தவரை எப்போதும் தோனி தான் எங்களுடைய கேப்டன். கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அவர் தான் எடுப்பார். அவர் அதை அறிவிக்கும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தான் கேப்டன். தற்போது எங்களுடைய முழு கவனம் ஐபிஎல் ஏலத்தின் மேல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பின் போது சென்னை அணியில் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கபட்டார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி மெண்டராக விளையாடி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்று சிலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தற்போது கேப்டனாக்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரஞ்சி கோப்பை போட்டிகள் இரு கட்டங்களாக நடத்தப்படும் : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா