ஐ.பி.எல். தொடரில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இன்னும் ப்ளே ஆப் வாய்ப்பு உள்ளதால் இந்த போட்டி முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸிற்கும், முதல்முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.


டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டத்தை எவின் லீவீஸ் – ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜெய்ஷ்வால் 12 ரன்களில் கூல்டர் நைல் பந்தில் விக்கெட் கீப்பர் இஷான்கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான சிறிது நேரத்தில் எவின் லீவீசும் 24 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.




ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமான கேப்டன் சஞ்சு சாம்சன் 3 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜிம்மி நீஷம் வீசிய முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. ஜிம்மி நீஷம் வீசிய இரண்டாவது ஓவரில் கடந்த போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்த ஷிவம் துபே 3 ரன்களில் போல்டாகி வெளியேறினார். 9 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்ததால் சரிவில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்த்த கிளன் பிலிப்சும் 3 ரன்னில் போல்டானார்.


4 ஓவர்களில் 32 ரன்கள் என்று வலுவாக இருந்த ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலைக்கு ஆளானது. ராகுல் திவேதியாவும் – டேவிட் மில்லரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். ஆனால், இந்த ஜோடியையும் ஜிம்மி நீஷம் பிரித்தார். 15வது ஓவரின் முடிவில் ராகுல் திவேதியா ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய 16வது ஓவரில் கோபால் 1 ரன்னில் வெளியேறினார்.




நீண்ட நேரமாக களத்தில் நின்று ராஜஸ்தானுக்கு நம்பிக்கை அளித்த டேவிட் மில்லரும் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் கூல்டர் நைல் பந்தில் வெளியேறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு 19வது ஓவரில் ராஜஸ்தான் அணிக்காக சக்காரியா பவுண்டரி அடித்தார். பவுண்டரி அடித்த அதே ஓவரில் சக்காரியாவும் போல்டானார். கடைசி ஓவரில் முதல் நான்கு பந்துகள் டாட் ஆன நிலையில் முஸ்தபிஷிர் ட்ரென்ட் போல்ட் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீட்டுக்கட்டுகள் போல சரிந்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தது.




மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கூல்டர் நைல் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் களமிறங்கிய ஜிம்மி நீஷம் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.