ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐ.பி.எல். தொடரின் 33வது ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.
யாருக்கு அதிக வெற்றி :
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இவற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இந்தியாவில் ஆடிய 15 போட்டிகளில் டெல்லி அணி 7 முறையும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
வெளிநாட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் 4 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவற்றில் டெல்லி அணி 1 முறையும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணியின் சராசரி ரன்கள் 155 ஆகும். அதேபோல, டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியின் சராசரி ரன்கள் 153 ஆகும்.
அதிக ரன்கள் :
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டெல்லி அணி சார்பில் அந்த அணியின் ஷிகர்தவான் அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் 533 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 471 ரன்களை குவித்துள்ளார்.
டெல்லி அணி சார்பில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா அதிகபட்சமாக 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத்கான் டெல்லிக்கு எதிராக 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டெல்லி அணி சார்பில் ககிசோ ரபாடாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து 6 கேட்ச்களை பிடித்துள்ளனர். ஹைதரபாத் அணி சார்பில் டெல்லி அணிக்கு எதிராக 8 கேட்ச்களை பிடித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் :
இரு அணிகளும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் வரை சென்ற அந்த போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 3 போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தபோது 4 முறையும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டாவது பேட்டிங் செய்யும்போது 4 முறையும், ஹைதராபாத் அணி 6 முறையும் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டெல்லி அணி சார்பில் தனிநபர் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 128 ரன்களை குவித்துள்ளார். ஹைதராபாத் அணிக்காக ஷிகர் தவான் டெல்லி அணிக்கு எதிராக 92 ரன்களை குவித்துள்ளார். தற்போது ஷிகர்தவான் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார்.