2021 ஐபிஎல் சீசனின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிட்டத்தட்ட நான்காவது இடத்தை பிடித்துவிட்டது. எனினும் கடைசி போட்டி வரையிலான பரபரப்பு இருக்கும் வகையில், கடைசி லீக் போட்டியை மும்பை அணி எப்படி நிறைவு செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 


இந்த லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிவதற்குள் எதிர்பாராத அறிவிப்புகள், வெற்றிகள், தோல்விகள் என இந்த ஐபிஎல் சீசனில் பல சம்பவங்கள் அரங்கேறின. அதில் குறிப்பிடும்படியாக இருந்தது முக்கிய அணிகளின் கேப்டன்சி பொறுப்புகளுக்கு ஏற்பட இருக்கும் மாற்றங்கள். 


பெங்களூரு அணி கேப்டன் கோலி, இந்த சீசனோடு தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை அணி கேப்டன் தோனி, தனது ஐபிஎல் கரியர் குறித்து, கேப்டன்சி பொறுப்பு குறித்தும் அவ்வப்போது சில ‘குழப்பமான’ கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடிய கடைசி லீக் போட்டியின்போது பேசிய தோனி, “அடுத்த ஐபிஎல் சீசனிலும் என்னை ‘யெல்லவ்’ ஜெர்ஸியில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எதிர்ப்பாராத சம்பவங்கள் நடக்க இருக்கின்றது. புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதனால், ஐபிஎல் தொடரின் அணியின் ஒரு வீரரை தக்க வைத்து கொள்வது தொடர்பான விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என நமக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.


சஸ்பென்ஸ் வைக்கும் தோனி:






முன்னதாக, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய தோனி, “என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில், சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் நடக்கும். எனக்கு சென்னையில்தான் ஃபேர்வெல்” என தெரிவித்திருந்தார். இதன் மூலம், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற சென்னையில் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.






இவ்வாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடு இருக்கிறார் என்பது போல அவ்வப்போது குறிப்பிடுகிறார் தோனி. ஆனால், அணி வீரராக தொடர்வாரா அல்லது ஆலோசகராக / பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை பற்றி சொல்லாமல் சொல்லி இருக்கிறார் தோனி. அவருடைய கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தோனி தொடர்ந்து கிரிக்கெட்டிங் வட்டாரத்தில் இருக்கப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 


எனினும், இந்த சீசனின் லீக் சுற்றின் கடைசி 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. தோல்வியுடன் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட இருக்கும் சென்னை அணியின் மிகப்பெரிய மைனஸ், மிடில் ஆர்டர்தான். தொடர் தோல்விகள் குறித்து தோனியிடன் கேட்டதற்கு, “ ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஒரு சில போட்டிகளில் சோப்பிக்காமல் அடுத்து வரும் போட்டிகளில் கம்-பேக் கொடுப்பதை தவிர்க்க முடியாது.” என தெரிவித்துள்ளார். நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்ற ப்ளே ஆஃப் சுற்றில் சொதப்பாமல் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.