ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய எவின் லீவீஸ் – ஜெய்ஸ்வாலும் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினர். ஜெய்ஷ்வால் 12 ரன்களிலும், எவின் லீவீசும் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.


இவர்கள் ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தானின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஷிவம் துபே, கிளன் பிலிப்ஸ் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். 4 ஓவர்களில் 32 ரன்கள் என்று வலுவாக இருந்த ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலைக்கு ஆளானது.




இதனால், ராகுல் திவேதியாவும் – டேவிட் மில்லரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். ஆனால், இந்த ஜோடியால் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை. ராகுல் திவேதியாவும், கோபாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தானுக்கு நம்பிக்கை அளித்த டேவிட் மில்லரும் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


லீவீஸ், ஜெய்ஷ்வால், மில்லர், திவேதியா தவிர அனைவரும் ஒற்றை இலக்கிலே ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளையும், ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜஸ்தான் அணியின் ஆட்டத்தை தொடக்கத்தில் பார்த்தபோது அந்த அணியின் ப்ரெஜக்ட் ஸ்கோர் 219 என்று இருந்தது. ஆனால், அந்த அணியால் 100 ரன்களைக்கூட கடக்க முடியவில்லை.




91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா அதிரடி தொடக்கத்தை அளித்தார். அவர் 13 பந்தில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து சக்காரிய பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், அவர் முஸ்தபிஷிர் ரஹ்மான் பந்தில் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை இஷான்கிஷான் மறுமுனையில் அதிரடியாக ஆடி உறுதி செய்தார்.


ராஜஸ்தான் அணி நிர்ணியித்த 90 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி 8.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் தொடக்க வீரர் இஷான்கிஷான் 25 பந்தில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய மும்பை அணி 9 ஓவர்களுக்குள் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது.




இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்திற்கு கீழே இறங்கியுள்ளது. ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் அணி இதுபோன்ற மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.