ஐ.பி.எல். தொடரின் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், கொல்கத்தாவுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.


இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பும்ரா ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது கில் அவுட்டானார். ஆனால், ஒன் மேன் ஆர்மியாக 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என தெறிக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதலில் நிதானமாக விளையாடிய திரிபாதியும் பிறகு வெங்கடேஷுடன் ஜோடி சேர, அவர் தன் பங்கிற்கு 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என எளிதாக இலக்கை எட்டினர். இதனால், 15.1 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்கு எதிரான கடைசி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள மும்பை அணி, ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 






முதல் இன்னிங்ஸ் ரீகேப்:


முதல் இன்னிங்ஸில், ரோஹித் களமிறங்கியதால், மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். டி காக்கோடு ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் ரன் சேர்த்தது மூலம், கொல்கத்தா அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.






சிறப்பாக விளையாடி வந்த ரோஹித், சுனில் நரேன் பந்துவீச்சில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ரோஹித்தை அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 80 ரன்களை எட்டியது.  தொடர்ந்து நிதானமாக விளையாடிய டி-காக் அரை சதம் கடந்தார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யகுமார், 5 ரன்களில் வெளியேறினார். அவரை அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். ஆனால், சொதப்பிய அவர் 14 ரன்களுக்கு வெளியேறினார், அவரை அடுத்து 55 ரன்கள் எடுத்திருந்தபோது டி-காக் அவுட்டாகினார். கடைசி ஓவர்களில் பொல்லார்டும், க்ருணாலும் களத்தில் நின்று பேட்டிங் செய்தனர்.  


2 பவுண்டரிகள், 1 சிக்சர் என வந்த வேகத்தில் ரன் சேர்த்துவிட்டு ரன் - அவுட்டாகி வெளியேறினார் பொல்லார்டு. அவரைத் தொடர்ந்து க்ருணாலும் பெவிலியன் திரும்பினார்.கொல்கத்தா பவுலர்களைப் பொருத்தவரை, தமிழக வீரர் வருண் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளும், நரேன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை.