ஐபிஎல் தொடரில் 41வது போட்டியில், ஷார்ஜா மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதின. இரு அணிகளும் தற்போது வலுவான நிலையில் இருப்பதால், ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானது. குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு இந்த போட்டியில் வெற்றி அவசியம். எளிதான சேஸிங்கில், தடுமாறி பிறகு கம் -பேக் கொடுத்த கொல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது.
குறைந்த இலக்கை சேஸ் செய்த கொல்கத்தாவை மிரட்டிய டெல்லி பெளலர்கள்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 127 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸை பொருத்தவரை, கொல்கத்தா அணி பெளலர்கள் சிறப்பான பெளலிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினர்.
சேஸிங்கின்போது கில், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் களமிறங்கினார். போட்டியின் ஐந்தாவது ஓவரில், லலித் யாதவ் வீசிய ஓவரில் வெங்கடேஷ் ஐயர் பவுல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதியும் அடுத்த ஓவரிலேயே வெளியேறி, கொல்கத்தாவின் சேஸிங்கில் ப்ரேக் போட்டனர். இரண்டு அதிரடி பேட்டர்களை போட்டியின் தொடக்கத்திலேயே இழந்த கொல்கத்தா அணிக்கு, கேப்டன் இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
ரபாடா, அஷ்வின் வீசிய 10,11வது என இரண்டு ஓவர்களில் போட்டி டெல்லியின் பக்கம் திரும்பியது. எளிதான சேஸிங்கை கடினமாக்கிய கொல்கத்தா அணிக்கு, ராணா, நரேன் களத்தில் நின்று ரன் சேர்த்தனர். 17,18வது ஓவரின்போது நரேன்,டிம் சவுதி ஆகியோர் வெற்றி பெற வேண்டிய சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எனினும், கடைசி வரை களத்தில் நின்ற ராணா (36*) அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த சீசனின் இரண்டாம் பாதியில், கொல்கத்தா விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம், ப்ளே ஆஃப்புக்கான ஓட்டத்தில் கொல்கத்தா அணி இன்னும் இடம் பெற்றுள்ளது. 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறி இருக்கும் கொல்கத்தா அணி, அடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும்.