நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். ஆகவே இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து ப்ளே ஆஃப் போட்டிக்கு முன்னேறியது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிருத்வி ஷா ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் பவுண்டரிகள் விளாசினார். அதைத் தொடர்ந்து 3ஆவது ஓவரை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் பிருத்வி ஷா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 




இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் ஷிகர் தவான் மற்றும் ஸ்டையோனிஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெல்லி அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  65ரன்கள் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டையோனிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த போது சிவம் மாவி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் 36 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவருக்கு பிறகு வந்த ஹெர்ட்மேயர் வருண் சக்ரவர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்தார். எனினும் அந்த பந்து நோ பாலாக அமைந்தது. இதனால் வருண் சக்ரவர்த்திக்கு அந்த விக்கெட் தரப்படவில்லை. 17 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. 




அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹெர்ட்மேயர் முயற்சி செய்தனர். எனினும் ஹெர்ட்மேயர் வெங்கடேஷ் ஐயரின் த்ரோவில் ரன் அவுட் ஆகி டெல்லி அணியின் நம்பிக்கையை தகர்த்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கடைசி வரை டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 30* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தில் 2 விக்கெட்டும், பெர்குசன் மற்றும் சிவம் மாவி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பெஸ்ட் தருணமாக விராட் கோலி இன்னிங்ஸ் தேர்வு! எந்த போட்டி அது?