ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக ஐசிசி இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தருணங்கள் தொடர்பாக ஒரு வாக்கு எடுப்பை நடத்தியது. அதில் இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகளில் சிறந்த தருணம் என்ற பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் இன்னிங்ஸ் தேர்வாகியுள்ளது. 


அதாவது 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 82* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார். 161 ரன்கள் என்ற கடினமாக இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வேகமாக வெளியேறினர். அதன்பின்னர் வந்த விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டார். 






இந்தப் போட்டியில் 39 பந்துகளில் அரைசதம் கடந்த கோலி அதன்பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் ஐசிசியின் வாக்கெடுப்பில் 68 சதவிகிதம் வாக்குகள் பெற்று சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் விராட் கோலியின் இன்னிங்ஸிற்கு போட்டியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வேட் 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற இன்னிங்ஸ் இடம்பெற்று இருந்தது. 




முன்னதாகநேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியானது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு அக்டோப்டர் 18ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்த்து முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியும் துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் நேரலையாக வரும் என்று கூறப்படுகிறது. 




இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்தச் சுற்று போட்டிக்கு முன்பாக இரண்டு வலுவான அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது வீரர்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் நவம்பர் 3ஆம் தேதி ஆஃப்கானிஸ்தனுடன் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 


இம்முறை சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் சூப்பர் 12 சுற்று மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த 'லார்ட்' ஷர்துல் தாகூர்- ரிசர்வ் பட்டியலில் அக்‌ஷர் பட்டேல் !