கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீசனின் முதல் பாதியில் சொதப்பியதை அடுத்து இரண்டாம் பாதியிலும் ஹைதராபாத் அணியின் சொதப்பல் தொடர்ந்து வருகிறது. டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய ஹைதராபாத், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த சீசனில்,வார்னர் தலைமையின் கீழ் தொடரை தொடங்கிய ஹைதரபாத் அணி பாதியிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். இரண்டாம் பாதி போட்டிகள் தொடங்கியபோது, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைக் கண்ட ஹைதரபாத் அணிக்காக ஸ்கோர் செய்யாத அவரை, இப்போது அணியிலும் எடுக்கவில்லை அணி நிர்வாகம்.
பத்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கு, இனி டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி வருகின்றது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை ஹோட்டல் ரூமில் இருந்து பார்த்த டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராமில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, ”துரதிருஷ்டவசமாக இனி மைதானத்தில் என்னை காண இயலாது, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக வார்னர்:
2014-ம் ஆண்டு முதல் ஹைதரபாத் அணிக்காக விளையாடி வரும் வார்னர், ஒவ்வொரு சீசனிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கும் அதிகமாக அடித்திருக்கும் அவர், ஹைதரபாத் அணிக்காக விளையாடியபோது மூன்று முறை ஆரஞ்சு கேப் வாங்கி அசத்தியவர். வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, 2016-ம் ஆண்டு கோப்பையை வென்று அசத்தியது.
கிரிக்கெட் மட்டுமின்றி, சமூக வலைதள பக்கங்கள் மூலம் பாட்டு, நடனம், ரீல்ஸ் என ஹைதராபாத் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் வார்னர். வார்னர் மட்டுமல்லாது வார்னரின் குடும்பத்தையே அணைத்து கொண்டனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இந்நிலையில், அவர் அணியை விட்டு விலக இருப்பதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ், “கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை ஹைதரபாத் அணி இழந்துவிட்டதால், இனி மீதமிருக்கும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார். இந்த காரணத்தால், வார்னர் களத்தில் இறக்கிவிடப்படாமல் இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.