உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் மிகவும் முதன்மையான வீரராக உலா வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்காக பல நெருக்கடியான போட்டிகளில் ஆடி வெற்றியைத் தேடித்தந்தவர் விராட் கோலி. சர்வதேச போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக விராட் கோலி ஆடி வருகிறார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் விராட் கோலி இந்த அணிக்காக ஆடி வருகிறார். ஒரு முறை கூட ஆர்.சி.பி. பட்டத்தை வெல்லாதபோதும் விராட் கோலி மீது கொண்ட அன்பின் காரணமாக ஒவ்வொரு தொடரிலும் ஆர்.சி.பி. ரசிகர்கள் அந்த அணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி:


இந்திய அணியிலும், ஆர்.சி.பி. அணியிலும் விராட் கோலியின் ஜெர்சி எண் 18 என்பது நமது அனைவருக்கும் தெரிந்தது ஆகும். ஆனால், விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக தனது தொடக்க காலத்தில் அணிந்திருந்த ஜெர்சி எண் 5 ஆகும். அதேபோல, ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அடித்த சிக்ஸரின் அதிகபட்ச தூரம் 103 மீட்டர் என்று பலரும் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், விராட் கோலி அடித்த சிக்ஸரின் அதிகபட்ச தூரம் 110 மீட்டர் ஆகும். இந்த வீடியோ சமீபநாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.






கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎல், தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆர்.சி.பி. அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அணிக்காக மணீஷ் பாண்டே 48 ரன்களும், ராகுல் டிராவிட் 44 ரன்களும் எடுத்து அவுட்டாக 14 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற  நிலை ஏற்பட்டது.


110 மீட்டர் சிக்ஸர்:

அப்போது, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான முரளிதரன் வீசிய பந்தை இறங்கி வந்து விராட் கோலி ஒரு சிக்ஸர் அடிப்பார். அந்த சிக்ஸர் 110 மீட்டர் தொலைவிற்கு சென்றது. அப்போது 21 வயதே ஆன விராட் கோலி அந்த போட்டியில் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைப்பார். மறுமுனையில் டெய்லர் 12 பந்துகளில் 2 சிக்ஸருடன் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த போட்டியில் ஆர்.சி.பி. அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.


அப்போது, விராட் கோலி 5வது விக்கெட்டிற்கு களமிறக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.