இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசனுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி முடிந்தநிலையில் தற்போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் தேதிகள் மீது உள்ளது. புதிய ஐபிஎல் சீசன் எப்போது, ​​எங்கு நடைபெறும் என்பதை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசனுக்கான அட்டவணையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


ஐபிஎல் சீசனுக்கு அணிகள் தயார்:


தற்போது வெளியான தகவலின்படி, ஐபிஎல் புதிய சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என்றும், மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி இறுதியில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் தேர்தல் தேதிகளுடன் முரண்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது, அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெற்றன. இந்த முறையும் வாரியம் அதையே விரும்புகிறது.


முன்னதாக, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் எண்ணம் இல்லை என்று பிசிசிஐ வட்டாரத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது , ஆனால் இதையும் மீறி இந்திய மண்ணில் ஐ.பி.எல். இருப்பினும், நியாயமான காரணங்களுக்காக எந்த மாநிலமும் ஐபிஎல் போட்டிகளை நடத்த விரும்பவில்லை என்றால், போட்டிகள் வேறு ஏதேனும் மைதானத்திற்கு மாற்றப்படும். ஆனால் போட்டிகள் இந்திய மண்ணில் மட்டுமே ஏற்பாடு செய்யப்படும் என்று தெளிவாக கூறினார்.


ஐபிஎல் வெளிநாடுகளிலும் நடந்துள்ளது..


கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. அதன்படி, ஐ.பி.எல். 2009 ஆம் ஆண்டு அனைத்து போட்டிகளும் தென்னாப்பிரிக்காவிலும், 2014ல் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. 


மகளிர் பிரீமியர் லீக் எப்போது..? 


பிசிசிஐ கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போன்று மகளிர் பிரீமியர் லீக்கையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்றன. கடந்த ஆண்டினை போல இந்தாண்டு போட்டியை பரபரப்பாக நடத்தவும், மேலும் பலரை சென்றடையவும் வாரியம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி, மகளிர் பிரீமியர் லீக் இம்முறை இரண்டு நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் மகளிர் பிரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆனது. இந்தாண்டும், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.